Monday, March 28, 2011



எட்டுத் திக்கும் எழுந்தே  போற்றும் சுப்பையா புகழை


எந்தம் மனத்துள் என்றும் வாழும்
சிந்தனைச் செல்வர்! செம்படை மறவர்!
அஞ்சா செஞ்சர்! அருந்தமிழ் அன்பர்!
துஞ்சா துழைத்த மக்கள் தொண்டர்!
அல்லும் பகலும் அரும்பணி ஆற்றிச்
சொல்லும் செயலும் சுடர நின்றவர்!
ஆலையில் உழைத்த அருமைத் தோழரின்
தோளை உயர்த்தித் துணிவைத் தந்தவர்!
தந்தை போன்றே தக்க வழிகளைச்
சொந்தமாய் எமக்குச் சூட்டி மகிழ்ந்தவர்!
இன்று எமக்குள் இயங்கும் திறனை
அன்று எமக்குள் அழகுற அளித்தவர்!
எல்லாத் துறையையும் எடுத்து விளக்கி
வல்ல ஆற்றலை வரமாய் வடித்தவர்!
மக்கள் தலைவர் வ.சுப்பை யா,என
அக்கனம் சுரக்கும் அமுத ஊற்றே!

வல்ல குருவாய்! நல்ல தலைவராய்!
வெல்லும் வழிகளை விளைத்த வீரராய்!
பழகுதற்கு எளிய பாசத் தோழராய!;
தொழுதற்கு உரிய தூய செயலராய்!
அரசியல் தெளிவை அளித்த முனைவராய்!
கரத்தைப் பிடித்துக் கம்யூனிஸ் டாக
ஆக்கிய அறிஞராய் எமக்கு வாய்த்தவர்!
தேக்கிய மாட்சி! தென்றலின் குளிர்ச்சி!
அவருடன் பழகிய அத்தனை நாள்களும்
சுவைமிகு நாட்கள்! அவைப்புகழ் நாட்கள்!
சுகந்திர வேள்வியில் சுகங்களை இட்டு
அகங்களில் விடுதலை அனலைக் அளித்தவர்!
அயலவர் புரிந்த அழிவுகள் கொஞ்சமா?
துயர்கள் கொஞ்சமா? துன்சிறை கொஞ்சமா?  
பட்ட கொடுமையைப் பாடுதல் எளிதோ?
கொட்டும் மழையும் கொளுத்தும் கோடையும்
கட்டிப் போடுமா? களைப்பை ஊட்டுமா?
முட்டி போதுமா? முடிவை மாற்றுமா?
உணர்வைத் தடுத்து உறங்கச் செய்யுமா?
குணத்தின் குன்றாய்க்! கொள்கைச் சுடராய்!
மனத்துள் மணக்கும் மாசிலா மனிதராய்!
இனத்தின் வடிவாய் எழுந்த "ஞாயிறு"
என்றே அவரை இயம்புதல் உண்மை!
நன்றே அவர்நெறி நாடுதல் நன்மை!
எழுத்து வன்மையும், எடுத்து ரைக்கும்
பழுத்த தன்மையும் பாட்டாளி மக்களின்
கூட்டாய் ஆயின! கூர்மதிக்கு எடுத்துக்
காட்டாய் ஆயின! கடமை கண்ணியம்
கட்டுப் பாடு கமழ்ந்த காடு!
எட்டுத் திக்கும் எழுந்தே போற்றும்
சுப்பையா புகழை! தூயவர் வாழ்வை!
எப்பொழுதும் எம்முள் இருப்பவர் அவரே!

சீவா ஏட்டினைச் செந்தமிழ்ப் பாட்டினை
ஆவலாய்க் கற்ற அழகைக் கண்டேன்!
ஆங்கில ஆற்றலும் ஆற்று நடையென
ஒங்கிச் செழிக்கும் உயர்வைக் கண்டேன்!
அண்ணல் நேருவும் அன்பாய் வந்தே
எண்ணரும் நலத்தை இயம்பக் கண்டேன்!
புதுவை நகரம் பொதுமைச் சோலையாய்ப்
புதுமை புரிந்த புரட்சி கண்டேன்!
ஏழை எளியோர் இதயம் மகிழ
வாழைபோல் வளங்கள் வழங்கக் கண்டேன்!
எல்லாச் சிறப்பும் பல்கிப் பெருகும்
வல்ல சுப்பையா வரலா(று) அன்றோ!


16.01.2011 தோழர் வ. சுப்பையா நூற்றாண்டு விழா, பிரான்சு

0 comments: