Wednesday, September 4, 2013

கம்பன் விழா 2013









Friday, August 2, 2013
பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்
பன்னிரண்டாம் ஆண்டுக் கம்பன் விழா


Monday, March 28, 2011
வள்ளுவர் ஊட்டும் உடைமைகள்
பண்புடைமை

தமிழ் வணக்கம்

அம்மா! தாயே! என்றுன்முன்
      அடியேன் பிச்சை ஏந்துகிறேன்
சும்மா என்னை அனுப்பாமல்
      சொற்கள் தந்து பசிதீர்ப்பாய்!
தம்மா தோண்டு கொடுத்தாலும்
      தமிழே! அமுதே! என்னுள்ளம்
கும்மா குத்துத் தாளமெலாம்
      கொட்டி ஆடி மகிழ்ந்திடுமே!

இறை வணக்கம்!

செம்மான் சீதை கேட்டவுடன்
      அம்மான் பின்னே சென்றவனே!
எம்மான் இராமா! வில்லழகா!
      எளியோன் பிச்சை ஏந்துகழிறேன்!
செம்மாந் தொளிரும் செந்தமிழை
      சிறியோன் எனக்கும் ஈந்திடுலாய்!
இம்மா நிலத்தில் உனைத்தவிர
      என்னைக் காப்பார் யாருள்ளார்?

வள்ளுவர் வணக்கம்!

அம்மன் என்பேன்! எனைக்காக்கும்
      அய்யன் என்பேன்! வள்ளுவனே!
எம்மின் இதயம் உனைநாடி
      ஏந்தும்! முப்பால் ஊட்டிடுவாய்!
இம்மண் உதித்த தவபேறே!
      இன்பத் தமிழின் தேனாறே!
செம்மண் மழைநீர் கலந்ததுபோல்
      செம்மைக் குறளில் எனைச்சேரே!

கம்பன் வணக்கம்!
 

கம்பா! கவிதை பெருங்கடலே!
       கைகள் ஏந்தி நிற்கின்றேன்

தெம்பா நானும் கவிபாடத்
      திறனைக் கொஞ்சம் ஆருளுகவே!
தும்பாய் என்னை எண்ணாமல்
      தூயா என்னுள் அமருகவே!
செம்பால் குடிக்க உன்வீட்டில்
      சொம்பாய் வந்து பிறப்பேனே!

தலைவர்  வணக்கம்!

தம்பால் தமிழைத் தரித்தவரே!
      தாழ்ந்து கைகள் ஏந்துகிறேன்!
எம்பால் இருந்து இயங்கிடுக!
      இன்னல் தீர மருந்திடுக!
சிம்பாய்க் கிடக்கும் சிறியோன்நான்
      செப்பும் கவியில் பிழையிருந்தால்
கம்பால் மெல்லத் தட்டிடுக!
      கவிதை நிறைத்து அமர்ந்திடுவேன்!

அவையோர் வணக்கம்

அம்பாள் முன்னே கைகுவித்து
      அடியார் கெஞ்சிம் நிலையைப்போல்
நம்மாள்  இவர்கள் என்றெண்ணழி
      நானும் அவையில் கைகுவித்தேன்!
எம்மால் படைக்கும் கவிதைகளில்
      இனிமை சற்றே இருக்கமெனில்
உம்மால் முடிந்த கையொளியை    
      உடனே தட்டி உசுப்புகவே!

பொன்னும் பொருளும் உடைமைகளா?
      மண்ணும் மணியும் உடைமைகளா?
கன்றும் குன்றும் உடைமைகளா?
      கனிசேர் மரங்கள் உடைமைகளா?
வென்றும் கொன்றும் சேர்த்துலகில்
      விளையும் பயன்கள் உடைமைகளா?
அன்றும் இன்றும் என்றென்றும்
      பண்பே வாழ்வின் தனியுடைமை!

உயிரைக் காக்கும் உடைமைகளை
      உரைக்கும் எங்கள் திருக்குறளே!
வயிறைக் காக்கும் நிலைமாற்றி
      வாழ்வைக் காக்கும் வழிகாட்டும்!
துயரைக் காக்கும் பெருங்கொடுமை
      தொடரும் வாழ்வு பழிதீட்டும்!
பயிரைக் காக்கும் வேலியெனப்
      பண்பைக் காத்துப் பயனுறுக!

இரண்டே அடிகள்! இவ்வுலகின்
      எல்லை உரைக்கும்! நல்லமுதம்
திரண்டே பொங்கும் திருக்குறளைத்
      தினமும் கற்பீர்! தீதகலும்!
இருண்டே கிடக்கும் இதயத்துள்
      இன்பம் விளைய இடமுண்டோ?
விருந்தே ஆகும்! மக்களுடன்
      விரும்பிப் பழகும் பண்புடைமை!

சொல்லச் சொல்லச் சுவையூறும்!
      தூய வாழ்வின் நிலைகூறும்!
அள்ள அள்ள அறிவூறும்!
      ஆன்ற குடியின் அறஞ்சேரும்!
மெல்ல மெல்ல உயிரேட்டில்
      வெல்லும் குறளைப் பதித்திடுவீர்!
நல்ல நெறிகள் அத்தனையும்;
      வல்ல தமிழின் பண்புடைமை!

மலைபோல் செல்வம் பெற்றாலும்
      மக்கள் பண்பு மனத்துள்ளே
இலையேல் என்றால் பாழ்கலத்தில்
      இட்ட பால்போல் வீணாகும்!
கலைபோல் கமழ, முற்றியுள
      கனிபோல் இனிக்கத் திருக்குறளைத்
தலைமேல் தரித்துக் காத்திடுவீர்!
      தமிழே உலகின் பண்புடைமை!

கூர்மை மின்னும் அறிவென்ன?
      கூட்டிச் சேர்த்த பொருளென்ன?
சீர்மை மின்னும் வாழ்வென்ன?
      செழித்து மின்னும் புகழென்ன?
நேர்மை மின்னும் நன்னெறிகள்
      நெஞ்சுள் இலையேல் மரம்போல்வார்!
நீர்மை மின்னும்! நிலஞ்செழிக்கும்!
      நேய தமிழே பண்புடைமை!
 
பெருத்த ஓசை எழும்முன்னே,
      பெரியோர் நெளிந்தே எழும்முன்னே,
உரித்த நிமிடம் வரும்முன்னே
      உடனே நிறுத்த சொல்முன்னே
விருத்தக் கவிதை அவையோர்கள்
      வெறுக்கும் முன்னே! நிறைகவியைப்
பொருத்த மாக முடிப்பதுவே
      புலவன் என்றன் பண்புடைமை!

பிரான்சு கம்பன் கழகத்தின் பொங்கல் விழா 26.02.2011
மக்கள்  தலைவர்                                            




புதுவையில் பூத்த பொதுமை மனத்தர்!
புதுமையை நாடிய புரட்சி வீரர்!
நாட்டுப் பற்றும் நற்றமிழ்ப் பற்றும்
கூட்டாய்ச் சேர்ந்த கொள்கைச் சீலர்!
கெடுதலை அறியாக் கேண்மைய ராகி
விடுதலை வேள்வியில் விளங்கிய வித்தகர்!
ஆன்ற அறிவும் ஆய்வுத் திறனும்
சான்ற நெறியும் சால்புடன் பெற்றவர்!
பண்பும் அன்பாய்ப் பழகும் தன்மையும்
தன்பால் கொண்டவர் தலைவர் சுப்பையா!
ஒடுக்கப் பட்டார் உயர வேண்டி
அடுக்கடுக் காக அரும்பணி செய்தவர்!
ஆலைத் தோழரின் அவல நிலையை
சீல முடனே தீர்த்து வைத்தவர்!
தேச பக்தி! தெளிந்த சிந்தனை!
மாசில் லாத மனத்தைக் கொண்டவர்!
பாட்டாளி வர்க்கக் கூட்டாளி யாக
நாட்டில் திகழ்ந்த நல்ல தலைவர்!
சுயநல மற்ற சுதந்தர மறவர்!
பயமறி யாத பண்பினர் சுப்பையா!
நல்லவர் வல்லவர் நாட்டுக் குழைத்தவர்!
வெல்லும் தமிழ்போல் வெற்றி கண்டவர்!
எக்குலத் தாரும் இனிதாய்ப் போற்றும்
மக்கள் தலைவர் மாண்பார் சுப்பையா!
நெஞ்சுள் வாழும் அஞ்சா அகத்தரின்
விஞ்சும் புகழை வியந்துரைப் போமே!

08.01.2011



எட்டுத் திக்கும் எழுந்தே  போற்றும் சுப்பையா புகழை


எந்தம் மனத்துள் என்றும் வாழும்
சிந்தனைச் செல்வர்! செம்படை மறவர்!
அஞ்சா செஞ்சர்! அருந்தமிழ் அன்பர்!
துஞ்சா துழைத்த மக்கள் தொண்டர்!
அல்லும் பகலும் அரும்பணி ஆற்றிச்
சொல்லும் செயலும் சுடர நின்றவர்!
ஆலையில் உழைத்த அருமைத் தோழரின்
தோளை உயர்த்தித் துணிவைத் தந்தவர்!
தந்தை போன்றே தக்க வழிகளைச்
சொந்தமாய் எமக்குச் சூட்டி மகிழ்ந்தவர்!
இன்று எமக்குள் இயங்கும் திறனை
அன்று எமக்குள் அழகுற அளித்தவர்!
எல்லாத் துறையையும் எடுத்து விளக்கி
வல்ல ஆற்றலை வரமாய் வடித்தவர்!
மக்கள் தலைவர் வ.சுப்பை யா,என
அக்கனம் சுரக்கும் அமுத ஊற்றே!

வல்ல குருவாய்! நல்ல தலைவராய்!
வெல்லும் வழிகளை விளைத்த வீரராய்!
பழகுதற்கு எளிய பாசத் தோழராய!;
தொழுதற்கு உரிய தூய செயலராய்!
அரசியல் தெளிவை அளித்த முனைவராய்!
கரத்தைப் பிடித்துக் கம்யூனிஸ் டாக
ஆக்கிய அறிஞராய் எமக்கு வாய்த்தவர்!
தேக்கிய மாட்சி! தென்றலின் குளிர்ச்சி!
அவருடன் பழகிய அத்தனை நாள்களும்
சுவைமிகு நாட்கள்! அவைப்புகழ் நாட்கள்!
சுகந்திர வேள்வியில் சுகங்களை இட்டு
அகங்களில் விடுதலை அனலைக் அளித்தவர்!
அயலவர் புரிந்த அழிவுகள் கொஞ்சமா?
துயர்கள் கொஞ்சமா? துன்சிறை கொஞ்சமா?  
பட்ட கொடுமையைப் பாடுதல் எளிதோ?
கொட்டும் மழையும் கொளுத்தும் கோடையும்
கட்டிப் போடுமா? களைப்பை ஊட்டுமா?
முட்டி போதுமா? முடிவை மாற்றுமா?
உணர்வைத் தடுத்து உறங்கச் செய்யுமா?
குணத்தின் குன்றாய்க்! கொள்கைச் சுடராய்!
மனத்துள் மணக்கும் மாசிலா மனிதராய்!
இனத்தின் வடிவாய் எழுந்த "ஞாயிறு"
என்றே அவரை இயம்புதல் உண்மை!
நன்றே அவர்நெறி நாடுதல் நன்மை!
எழுத்து வன்மையும், எடுத்து ரைக்கும்
பழுத்த தன்மையும் பாட்டாளி மக்களின்
கூட்டாய் ஆயின! கூர்மதிக்கு எடுத்துக்
காட்டாய் ஆயின! கடமை கண்ணியம்
கட்டுப் பாடு கமழ்ந்த காடு!
எட்டுத் திக்கும் எழுந்தே போற்றும்
சுப்பையா புகழை! தூயவர் வாழ்வை!
எப்பொழுதும் எம்முள் இருப்பவர் அவரே!

சீவா ஏட்டினைச் செந்தமிழ்ப் பாட்டினை
ஆவலாய்க் கற்ற அழகைக் கண்டேன்!
ஆங்கில ஆற்றலும் ஆற்று நடையென
ஒங்கிச் செழிக்கும் உயர்வைக் கண்டேன்!
அண்ணல் நேருவும் அன்பாய் வந்தே
எண்ணரும் நலத்தை இயம்பக் கண்டேன்!
புதுவை நகரம் பொதுமைச் சோலையாய்ப்
புதுமை புரிந்த புரட்சி கண்டேன்!
ஏழை எளியோர் இதயம் மகிழ
வாழைபோல் வளங்கள் வழங்கக் கண்டேன்!
எல்லாச் சிறப்பும் பல்கிப் பெருகும்
வல்ல சுப்பையா வரலா(று) அன்றோ!


16.01.2011 தோழர் வ. சுப்பையா நூற்றாண்டு விழா, பிரான்சு

தோழர் வ. சுப்பையா


தோழர் வ. சுப்பையா

ஆலைத் தொழிலாளர் வேலை பெருந்துயரை
மேலை உலகறிய வீழ்த்தியவர் - சோலையிலே
காலைக் கதிர்பரவும்! கண்ணிகர்த்த சுப்பையா
காலை மனம்பரவும்! காப்பு!

06.02.2011

இன்பம் பொங்கும்

இன்பம் பொங்கும்


தமிழினத்தின் சால்புகளைச் சாற்றும்! இன்பத்
           தைத்திருநாள்! தமிழ்ப்பெருநாள்! உழவின் பொன்னாள்!
அமிழினத்தின் சொல்லெடுத்துக் கவிதை பாடி
         அருந்தமிழின் புத்தாண்டை அழைப்பீர்! இல்லம்
சிமிழ்மணத்தின் வாசமெனக் கமழ, மின்னும்
          சீர்மனத்து வள்ளுவனைச் சேர்வீர்! தண்ணீர்க்
குமிழ்கணத்தில் உடைந்துவிடும்! நெஞ்சுள் உற்ற
          குப்பைகளைக் கொளுத்திடுவீர்! போகி பொங்கும்!

ஒற்றுமையின் உயர்வுகளைப் பாடிப் பாடி
          உளஞ்சோர்ந்து போனதுதான் மிச்சம்! சேர்ந்த
நற்றுணையின் கால்களையே வாரி வாரி
          நாமடைந்த இழிவுகளே உச்சம்! அன்னை
பற்றினையும், செந்தமிழாம் நாட்டின் மேலே
          படர்ந்தொளிரும் அன்பினையும் வைப்பீர்! சீர்கள்
முற்றினையும் பெற்றிடுவீர்! நம்மின் மீது
          மூண்டபழி போக்கிடுவீர்! பொங்கல் பொங்கும்!

மாடுகள்தாம் தலையாட்டும்! ஓடும்! மேயும்!
          மனிதர்களும் தலையாட்டி மேயும் காலம்!
காடுகளும் தோற்றவிடும் வண்ணம் இன்று
          நாடுகளும் மாறிவரும் பொல்லாக் காலம்!
வீடுகளும் பொலிவுறவே மாற்றம் செய்து
          விரும்புகிற வண்ணத்தை இட்டோம்! நெஞ்சக்
கூடுககளில் குவிந்துள்ள குப்பை நீக்கிக்
          கொண்டொளிரச் செய்திடுவோம்! உழவு பொங்கும்!

காணுகின்ற பொங்களுண்டு! அந்நாள் தன்னைக்
          கவிஞன்நான் எதிர்கின்றேன்! அடிமை யென்று
கூணுகின்ற சிறுசெயலை வளர்க்கும் அந்நாள்!
          கூலியென்றும் கூனனென்றும் பேசும் அந்நாள்!
நாணுகின்ற செயற்போக்கிச் சாதி என்னும்
          நாறுகின்ற வெறிநீக்கிக் பிறப்பொக் கும்சீர்
பேணுகின்ற வள்ளுவனார் வழியை ஏற்பீர்!
          பெருமையெலாம் பந்தாடும்! இன்பம் பொங்கும்!



24.01.2011

உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளின்
எங்கள் இதயமலர் வாழ்த்துக்கள்! - சங்கமொளிர்
தங்கத் தமிழ்பரவத் தண்டமிழர் சீர்பரவ
எங்கும் உழைப்போம் இணைந்து


15.02.2011